TN Budget 2026: சைக்கிள் டு லேப்டாப்; பள்ளி, உயர்கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மாணாக்கர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் ‘வெற்றி மடிக்கணினி’ திட்டத்திற்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5 லட்சம் பள்ளி மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் ஸ்மார்ட் சைக்கிள்கள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாகப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 3,734 பள்ளிகள் ரூ.2,132 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட உள்ளன.
தங்குமிட வசதியுடன் கூடிய நவீன உண்டு, உறைவிடப் பள்ளிகள் காமராஜர் பெயரில் அமைக்கப்படும். தங்குமிட வசதிகளை மேம்படுத்த ரூ.10 கோடி மூலதன நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கற்றல் வெளிப்பாடுகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கப் பள்ளிப் பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2031-ம் ஆண்டிற்குள் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ கல்லூரிகளில் பயிலும் 5 லட்சம் மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும். அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களிலும் SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்குக் கூடுதல் பயிற்சி வகுப்புகள் தொடங்குவதற்காக ரூ.3.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு நூலகங்களை நவீன டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மாணவர்கள் தங்கம் வெல்வதை இலக்காகக் கொண்டு ரூ.50 கோடி மதிப்பில் 10 சிறப்பு ஒலிம்பிக் மையங்கள் உருவாக்கப்படும்.
