தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தீக்காய வார்டுகள்!
தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் பட்டாசு விபத்துகளில் காயமடைவோருக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு தீக்காய வார்டுகளை அமைக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் தீக்காயங்களுக்கு விரைவாகச் சிகிச்சை அளிக்கும் வகையில் இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தீக்காயங்களால் பாதிக்கப்படுவோருக்கு அவசர சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி நாளில் பட்டாசு விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில் பட்டாசு வெடிக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்.
