ஷூ, சாக்ஸ், மழைக்கோட், ஸ்வெட்டர்… அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ரூ.52 கோடி திட்டம்!
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 2027–2028-ஆம் கல்வியாண்டில் இலவசமாக வழங்கப்பட உள்ள ஷூ, சாக்ஸ், மழைக்கோட் மற்றும் கம்பளி ஸ்வெட்டர்களைக் கொள்முதல் செய்ய ரூ.52.05 கோடி மதிப்பில் 4 டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் இந்த டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.
எந்தப் பொருளுக்கு எவ்வளவு நிதி?
மாணவர்களுக்கு ஷூ வாங்க ரூ.37.24 கோடியும், அதனுடன் வழங்கப்படும் சாக்ஸ்களுக்கு ரூ.9.07 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்க 91,771 மழைக்கோட்டுகள் வாங்க ரூ.3.32 கோடி மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இவை செர்ரி சிவப்பு நிறத்தில், 28 முதல் 34 இன்ச் வரையிலான அளவுகளில் தயாரிக்கப்பட உள்ளன.
மேலும், குளிர் அதிகம் உள்ள மலைப்பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கம்பளி ஸ்வெட்டர் வழங்க ரூ.2.42 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மலைப்பகுதி மாணவர்களுக்கு முன்னுரிமை
கோவை, நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் மலைப்பகுதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மழைக்கோட்டுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் மூலம் அடுத்த கல்வியாண்டில் மாணவர்களுக்குத் தேவையான பொருட்களை உரிய காலத்தில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
