டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு.. கூடுதல் காலிப் பணியிடங்கள் சேர்ப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (குரூப் 1) அறிவிக்கையில் கூடுதலாக 20 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குரூப் 1 தேர்வுக்காகக் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் 26 காலிப் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தன.
மாநிலத்தின் உயரிய நிர்வாகப் பதவிகளுக்கான இந்தத் தேர்வில் பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகத் தேர்வர்களும் பல்வேறு போட்டித் தேர்வு அமைப்பினரும் தொடர்ந்து கவலை தெரிவித்து, எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பையும் தேர்வர்களின் கோரிக்கையையும் பரிசீலித்த டிஎன்பிஎஸ்சி, தற்போது கூடுதலாக 20 பணியிடங்களைச் சேர்த்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குரூப் 1 தேர்வுக்கான மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 26-லிருந்து 46 ஆக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பு தேர்வுக்காகத் தீவிரமாகத் தயாராகி வரும் தேர்வாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
