TNPSC குரூப்-1 தேர்வு தேதி மாற்றம்: புதிய தேதியை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 26 உயர் பதவிகளுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் தேதியில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தேதி மாற்றத்தை நோட் பண்ணிக்கோங்க.
டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 23ம் தேதியன்று வெளியிட்ட குரூப்-1 தேர்வுக்கான அறிக்கையின்படி, முதல்நிலைத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி நடைபெறுமென கூறப்பட்ட நிலையில், தற்போது நிர்வாகக் காரணங்களால் செப்டம்பர் 27ம் தேதிக்கு தேர்வு மாற்றப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தனது புதிய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. தேர்வு தேதி மாற்றப்பட்டிருந்தாலும், இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

இத்தேர்விற்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கடந்த ஜூன் 30-ஆம் தேதி முதல் இணைய வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 29, 2026 ஆகும்.
தேர்வு தேதி சுமார் 20 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், குரூப்-1 தேர்விற்குத் தீவிரமாகத் தயாராகி வரும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்குப் பாடங்களைப் திருப்புதல் செய்யக் கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது. தேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் ஹால் டிக்கெட் வெளியாகும் தேதிகளைத் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
