செப்.6ல் TNPSC குரூப் 1 தேர்வு - காலிப் பணியிடங்கள் மற்றும் கட்டண விவரங்கள்!

 
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் புதிய மாற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் , 26 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (குரூப் 1) அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயரிய அரசுப் பதவிகளுக்கான இத்தேர்வின் முக்கியத் தேதிகள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளைத் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் 1 தேர்வுக்குத் தகுதியுடைய தேர்வர்கள் ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 29ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத் தொடக்க நாள்: ஜூன் 30, 2026,  விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 29, 2026, முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: செப்டம்பர் 6, 2026 (06.09.2026)

இம்முறை தேர்வர்களின் வசதிக்காக விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தும் முறையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக் கட்டணத்தை நெட் பேங்கிங், கிரெடிட்/டெபிட் கார்டுகள் மட்டுமின்றி, தற்பொழுது நடைமுறையில் உள்ள UPI மூலமாகவும் எளிதாகச் செலுத்தலாம் எனத் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

மொத்தமுள்ள 26 காலிப் பணியிடங்களுக்கான விரிவான வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடத்திட்டம் அடங்கிய முழுமையான அறிவிக்கை ஜூன் 30ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (tnpsc.gov.in) வெளியிடப்படும். நீண்ட நாட்களாகக் குரூப் 1 தேர்வுக்குத் தயாராகி வரும் தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.