நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு: 4.89 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

 
டிஎன்பிஎஸ்சி

 

தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு நாளை (நவம்பர் 1) நடைபெற உள்ளது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் எழுத உள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 579 பேர் போட்டியிடுகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி

1,647 தேர்வு மையங்களில் ஏற்பாடு

மாநிலம் முழுவதும் 1,647 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 173 மையங்களில் 51,721 பேர் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு காலை 9.30 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும். மூன்று மணி நேரம் நடைபெறும் தேர்வில் மொத்தம் 200 கொள்குறி வகை வினாக்கள் இடம்பெறும். மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் தேர்வு

பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்களும், திறனறிவுப் பகுதியில் 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலப் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும்.

ஹால் டிக்கெட் அவசியம்

தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மையம், நேரம் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்து, ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.