டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழியாக நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 2ஏ தேர்வுக்கான அடுத்தகட்ட முக்கிய அறிவிப்பைத் தேர்வாணையச் செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் முறைப்படி வெளியிட்டுள்ளார். இத்தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த தரவரிசை விபரங்கள் அனைத்தும் தற்போது தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கான ஆறாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 10ம் தேதி சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நேரடியாக நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், நாள் மற்றும் நேரம் அடங்கிய அழைப்பாணையினைத் தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு விபரங்கள் தேர்வர்களுக்குக் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும் என்பதால் தனியே அஞ்சல் மூலம் அழைப்பாணை அனுப்பப்பட மாட்டாது. இந்தச் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கண்டிப்பாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதற்கான எவ்வித உறுதியும் அளிக்க இயலாது எனவும் தேர்வாணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
