“இன்னொரு கரூர் சம்பவம் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே...” - திருமாவளவன் விளக்கம்!

 
திருமாவளவன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டில்’ அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது உரையைச் சுருக்கமாகப் பேசி மாநாட்டை முன்கூட்டியே நிறைவு செய்தார்.

மாநாட்டு மேடை மற்றும் ரேம்ப் பகுதிகளைத் தொண்டர்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்ததால், மேடை அமைப்பிலும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கிச் சிலர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புக் கருதித் தொண்டர்களைக் கலைந்து செல்லுமாறு திருமாவளவன் நேரடியாக அறிவுறுத்தினார்.

திருமாவளவன்

மாநாட்டில் ஏற்பட்ட சூழல் குறித்துப் பேசிய திருமாவளவன், "உயிருக்கு அச்சம் ஏற்படும் அளவுக்குக் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பெண்கள், முதியவர்கள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கரூர் போன்ற இடங்களில் நடந்த அசம்பாவிதச் சம்பவங்கள் மீண்டும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்ததாகவும், அதன் காரணமாகவே திட்டமிட்ட உரையைத் தவிர்த்துத் தீர்மானங்களை மட்டும் வாசித்து மாநாட்டை நிறைவு செய்ததாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.