"நம்பிக்கைக்காக எழுதிய பாடலை அழிவுக்குப் பயன்படுத்துவதா?" - அமெரிக்க ராணுவத்தின் செயலால் பிரபல பாடகி கேட்டி பெர்ரி கொந்தளிப்பு!

 
பாடகி கேட்டி பெர்ரி

பிரபல அமெரிக்கப் பாடகியும் பாடலாசிரியருமான கேட்டி பெர்ரி, ஈரான் மீதான அமெரிக்க ராணுவத் தாக்குதல் வீடியோக்களில் தனது புகழ்பெற்ற 'பயர் ஒர்க்' பாடல் பயன்படுத்தப்பட்டதற்குத் தனது கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பாடகி கேட்டி பெர்ரி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளின் தாக்குதல் காட்சிகளுடன், 2010-ஆம் ஆண்டு வெளியான தனது 'பயர் ஒர்க்' பாடல் இணைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் தனது பாடலைப் பயன்படுத்துவதற்குத் தன்னிடம் எந்தவித அனுமதியும் கோரப்படவில்லை என்றும், இதற்கு தான் எந்தவொரு ஒப்புதலும் வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கேட்டி பெர்ரி

தனது பாடலின் உண்மையான நோக்கம் குறித்து கேட்டி பெர்ரி குறிப்பிடுகையில், மனிதர்களின் கடினமான காலங்களிலும், துயரமான தருணங்களிலும் அவர்களுக்குள் நம்பிக்கையையும் மனவலிமையையும் வரவழைக்கும் ஒரு ஊக்கமளிக்கும் கீதமாகவே இந்த பாடலைத் தான் உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேட் பெர்ரி விண்வெளி

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு பாடலை, போரின் அழிவு மற்றும் வன்முறைக் காட்சிகளுக்கான பின்னணி இசையாகப் பயன்படுத்துவது, அப்பாடலின் அடிப்படை நோக்கத்திற்கே முற்றிலும் எதிரானது என்று அவர் தனது ஆழமான வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க ராணுவத்தின் இந்தச் செயலுக்குக் கேட்டி பெர்ரியின் ரசிகர்கள் மற்றும் உலகளாவிய இசைப்பிரியர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.