இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை... 20 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!

 
மழை விடுமுறை

தென்மேற்கு வங்கக்கடல் முதல் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் வரை நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை மற்றும் கிழக்குத் திசைக் காற்று அலைகளின் தாக்கம் காரணமாக, தமிழகத்தில் இன்று நவம்பர் 23ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை மீண்டும் தீவிரமடையவுள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் காரணமாக, இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை (64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ. வரை) பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 23 முதல் 26-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மழை

மழையின் தாக்கம் நாளை (நவம்பர் 24) மேலும் விரிவடைந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் என மொத்தம் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெல், நிலக்கடலை, பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை உடனடியாக அறுவடை செய்து பாதுகாப்பான இடங்களில் சேமித்து வைக்குமாறும், விளைநிலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதிகளைச் சீரமைக்குமாறும் இந்திய வானிலை ஆய்வு மையம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.