இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... தூத்துக்குடி பனிமய மாதா பெருவிழா - கலெக்டர் அறிவிப்பு!
இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தூய பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, ஆகஸ்ட் 8-ஆம் தேதி வேலை நாளாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை பொருந்தும்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம் கத்தோலிக்கச் கிறிஸ்தவர்களின் மிக முக்கியப் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். 16-ஆம் நூற்றாண்டில் அழகிய போர்த்துகீசியக் கட்டிடக்கலை பாணியில் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இத்திருக்கோவிலின் 400-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, 1982-ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இத்திருத்தலத்தைப் பேராலயமாக உயர்த்திக் கெளரவித்தார்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இந்தச் சிறப்புப் பெருவிழாவில், தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாதி, மத பேதமின்றி கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
