இன்று ஆவணி சதுர்த்தசி... சிவ ஆலயங்களில் நடராஜர் அபிஷேகம்!
சிவபெருமானின் திருக்கோலங்களில் காண்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும் சிறப்புமிக்க கோலம் நடராஜர் திருவடிவம். கூத்தன், சபேசன், அம்பலத்தான் என பல பெயர்களால் கொண்டாடப்படுபவர் நடராஜர். இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை குறிக்கும் வகையில் தத்துவரூபமாகத் திகழும் நடராஜரின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என ஐந்தொழில்களையும் புரிதலை விளக்குகிறது. இத்தகைய சிறப்புகளை உடைய நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். நடராஜர் அபிஷேகம் மாசி சதுர்த்தசி , சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை என 6 நாட்களில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறும் ஆலயங்களில் அதிகாலையில் திருவனந்தல், காலசந்தி எனப்படும் காலை பூஜை, பிற்பகலில் உச்சிக் கால பூஜை, சாயரட்சை எனப்படும் சாயங்கால பூஜை, ராக்காலம் எனப்படும் இரவு பூஜை அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜை ஆகியன. தேவர்களுக்கு ஒருநாள் என்பது, பூவுலகில் ஓர் ஆண்டாகும். தை முதல் ஆனி வரை உத்தராயனம் என்றும் ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் அழைக்கிறோம். உத்தராயனம் தேவர்களின் பகல்பொழுதாகவும் தட்சிணாயனம் இரவுப் பொழுதாகவும் கருதப்படுகிறது. எனவே நாம் ஓர் ஆண்டில், தேவர்கள் ஆறுகால பூஜைகள் செய்யும் நாட்களில் நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் இடத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அரூபமாய் எழுந்தருளுவர் என்பது ஐதிகம். அந்த நேரத்தில் நடராஜரின் அபிஷேகத்தை தரிசனம் செய்து நாம் வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் எனக் கூறுகின்றனர்.

குறிப்பாக, வறுமை நீங்கிச் செல்வச் செழிப்புடனான வாழ்க்கை அமையும். பாவங்களிலிருந்து விடுதலையும் பிறவிப் பெருங்கடலைக் கடக்க நல்லருளும் சித்திக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
இன்று ஆவணி சதுர்த்தசி திதி 18.8.2024ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அனைத்து சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இன்று ஆடல் வல்லானுக்கு நடைபெறும் அற்புத அபிஷேகங்களை தரிசனம் செய்து நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறப் பெறலாம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
