இன்று உலகத் தந்தையர் தினம்... பேரன்பை விதைக்கும் அப்பாக்களைக் கொண்டாடுவோம்!

 
தந்தையர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலகத் தந்தையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூன் 21-ஆம் தேதியான இன்று, ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ அவர்களின் வாழ்நாளின் முதல் 'ஹீரோ'வாக விளங்கும் அப்பாக்களின் உன்னதக் காதலைக் கொண்டாடும் நன்னாளாக இந்தத் தந்தையர் தினம் அமைந்துள்ளது.

குழந்தைகளைப் பால்யத்தில் தனது தோள் மேல் ஏற்றி இந்த உலகத்தைப் பார்க்க வைத்த தகப்பன், அவர்கள் வளரத் தொடங்கியதும் எட்டி நின்று பார்த்தே சந்தோஷப்படுகிறான். பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், ஊக்கத்தையும் அருகில் இருந்து கொடுக்கும் பெரும்பாலான அப்பாக்கள், அந்த குழந்தைகள் வாழ்க்கையில் உச்சங்களைத் தொடும் சமயங்களில் தங்களை அறியாமலேயே தள்ளியே நிறுத்திக் கொள்கின்றனர்.

"வருங்கால தலைமுறையைச் சரியாக உருவாக்குவது என்னுடைய தார்மீகக் கடமை. இதற்காக எந்தப் புகழ்ச்சியையோ, கொண்டாட்டத்தையோ வருங்கால சந்ததியிடம் நீயும் எதிர்பார்க்கக் கூடாது" என வாயால் சொல்லாமல், தன்னுடைய பிள்ளைக்குத் தனது ஒழுக்கமான வாழ்வின் மூலம் வாழ்ந்து காட்டுகிற வரம் அப்பாக்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

நாளை தந்தையர் தினம்... கொண்டாட்ட சில ஐடியாக்கள்!

சென்ற நூற்றாண்டில் அப்பாக்களுக்குச் சொல்லப்பட்ட அனைத்துக் கோபமான, அழுத்தமான, ரௌத்திரமான பிம்பங்களையும் இன்றைய தலைமுறை அப்பாக்கள் அடியோடு உடைத்துள்ளனர்: இன்றைய அப்பாக்கள் குழந்தைகளுக்குச் செவிலித்தாயாக, சகோதரனாக, தோழனாக, அனைத்துமாகத் மாறித் தோளில் சாய்த்துத் தாலாட்டிக் கதை சொல்லும் அப்பாக்களாக மாறியிருப்பது இந்த நூற்றாண்டு குழந்தைகள் வாங்கி வந்த பெருவரம் என்றே சொல்லலாம்.

பால்யங்களிலும், திருமணத்திற்குப் பின் குடும்பக் கடமைகளிலும் தன்னைப் பற்றி யோசிக்க நேரம் இல்லாத அப்பாக்கள் தான், பிள்ளைகள் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்கள். வளமான வாழ்க்கையில் வளர்ச்சிக்கு வழிகாட்டும் அப்பாவாக இருந்தாலும், கடன்பட்ட வாழ்க்கையில் கலக்கம் இல்லாத வாழ்க்கைக்கு வழிகாட்டும் அப்பாவாக இருந்தாலும், குடும்பத்தின் ஆணிவேராக இருந்து அம்மாக்கள் தங்களது பேரன்பைக் குழந்தைகளிடம் செலுத்தக் கூடிய உன்னதச் சூழ்நிலையை உருவாக்குபவர்கள் அப்பாக்கள் தான்.

அம்மாவின் அன்பை ஒரு குழந்தை ஆறு மாதக் குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே உணர முடியும். ஆனால், அப்பாவின் அன்பை அந்த குழந்தை, தான் ஒரு காலத்தில் அப்பாவாகி, தன்னுடைய குழந்தையை ஒரு அப்பாவாகக் கொஞ்சும் போது தான் முழுமையாக உணர முடியும்.

மகள் அப்பா பாசம்

அப்பாக்கள் முதன்முதலாகத் தூக்கியதையோ, கொஞ்சியதையோ குழந்தைகள் அறிவதில்லை. நிழலாய் வந்து துணை நின்ற அப்பாவின் வியர்வை கலந்த உழைப்பு தான் தங்களது இன்றைய அடையாளம் என்பதைப் பிள்ளைகள் தாம் பெற்றோராக மாறும் போதுதான் உணர்கிறார்கள். வாழ்வில் எத்தனை இடர்கள், துன்பங்கள் வந்தாலும் குழந்தைகளின் மீது கொண்ட அக்கறையைக் கொஞ்சமும் குறைத்துக் கொள்ளாதவர்கள் அப்பாக்கள் மட்டுமே.

எப்போதும் நன்றிகளை எதிர்பார்க்காமல், தங்களது தூய அன்பைக் கூட ஒரு கடமையாகச் செய்யும் இன்றைய தலைமுறை அப்பாக்களுக்கு நமது நன்றியைச் சிரிப்பலைகளால் சொல்லுவோம். அதுவே அவர்களுக்கு நாம் செலுத்தும் ஆகச்சிறந்த நன்றியாக அமையும். அப்பாக்களின் வலியை உணர்வோம், அவர்களை என்றும் நெஞ்சாரக் கொண்டாடுவோம்!