இன்று ராம நவமி.. ரவி யோகம் பெற இதை செய்ய மறக்காதீங்க... வழிபடும் நேரமும், முறைகளும்!

 
ராம நவமி ராம நவமி

இன்று மார்ச் 26, வியாழக்கிழமை ராம நவமி திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ராம நவமி, சூரியனின் அருளாசி நிறைந்த 'ரவி யோகம்' என்ற அபூர்வமான யோகத்துடன் இணைந்து வருவது கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.

தீயவற்றை அழித்து தர்மத்தை நிலைநாட்ட மகாவிஷ்ணு எடுத்த ஏழாவது அவதாரமான ஸ்ரீராமரின் பிறந்த தினம் இன்று 'ராம நவமி'யாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி வியாழக்கிழமை ராம நவமி அமைந்திருப்பதுடன், சூரிய பகவானின் ஆதிக்கம் நிறைந்த ரவி யோகமும் கூடி வருவது பக்தர்களுக்கு இரட்டிப்பு பலன்களைத் தரும்.

ரவி யோகம் என்றால் என்ன? இதன் பலன்கள்:

இந்த ஆண்டு ராம நவமி அன்று சூரியனின் விசேஷமான 'ரவி யோகம்' உருவாகிறது. ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருப்பவர்கள், அரசு வழியில் தடைகளைச் சந்திப்பவர்கள் இந்த நேரத்தில் ராமரை வழிபட்டால் அந்தத் தோஷங்கள் நீங்கும். இந்த யோகத்தில் செய்யப்படும் தான தர்மங்கள் மற்றும் மந்திர ஜெபங்கள் பல மடங்கு புண்ணியத்தைத் தரும். குறிப்பாக நோய்கள் மற்றும் நீண்ட நாள் மனக்கவலைகள் நீங்க இது உகந்த நேரமாகும்.

பூஜை செய்ய உகந்த நேரம் மார்ச் 26, காலை: 10:45 மணி முதல் 11:45 மணி வரை. அதன் பின்னர் மாலை: 4:30 மணி முதல் 5:30 மணி வரை இன்று நவமி திதி மாலை வரை நீடிப்பதால் நாள் முழுவதுமே ராம நாமத்தைச் சொல்லலாம்.

வழிபடும் முறை:

அதிகாலையில் நீராடி, வீட்டின் பூஜை அறையில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்திற்குத் துளசி மற்றும் மல்லிகைப் பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். ராமருக்குப் பிரியமான நீர் மோர், பானகம், வடை பருப்பு மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். வசதி இல்லாதவர்கள் வெறும் வாழைப்பழம் மற்றும் ஒரு டம்ளர் பால் வைத்தும் வழிபடலாம்.

"ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம" அல்லது "ஸ்ரீ ராம ஜெயம்" என்ற மந்திரத்தை 108 அல்லது 1008 முறை எழுதலாம் அல்லது சொல்லலாம். இன்றைய ரவி யோகத்தின் பலனை முழுமையாகப் பெற விசிறி, குடை அல்லது நீர் மோர் ஆகியவற்றை ஏழைகளுக்குத் தானமாக வழங்குவது சிறந்தது.

ராமர்

கோவில் வழிபாடு:

அருகில் உள்ள ராமர் அல்லது பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி வழிபடுவது நல்லது. அனுமன் சன்னதியிலும் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம், ஏனெனில் ராம நாமம் ஒலிக்கும் இடத்தில் அனுமன் அரூபமாக எழுந்தருளுவார் என்பது ஐதீகம்.

ராமர்

ராம நவமி சிறப்புத் தகவல்கள்:

ரவி யோகம் (சூரிய யோகம்) இணைந்த ராம நவமி என்பதால் விசேஷம், ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை மறக்காதீங்க. தடைபட்ட காரியங்கள் கைகூடும், சூரிய தோஷம் நீங்கும்.