இன்று ஆடி ஞாயிறு... அம்மன் கோவிலில் இதைச் செய்ய மறக்காதீங்க... திருஷ்டி விலகும்.. காரிய தடைகள் நீங்கும்!
தமிழ் மாதங்களில் 'ஆடி மாதம்' அம்மன் வழிபாட்டிற்குரிய மிக விசேஷமான மாதமாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் (ஆடி ஞாயிறு) அம்மன் மற்றும் சூரிய பகவானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாட்களாகும்.
ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசியானது சந்திரனின் வீடாகும். பிதுர்காரகனான சூரியன், மாத்ருகாரகனான சந்திரனின் வீட்டிற்குள் நுழைவதால், இந்த மாத ஞாயிற்றுக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கும், பித்ருக்களின் ஆசி பெறுவதற்கும் உகந்த நாளாக மாறுகிறது. மேலும், கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் இந்தச் சமயத்தில், அம்மை போன்ற வெப்ப நோய்களிலிருந்து காத்துக் கொள்ள மாரியம்மனை வழிபடுவது மரபு.

காலை சூரிய வழிபாடு: ஆடி ஞாயிறு அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி, உதிக்கும் சூரியனுக்கு அர்க்கியம் (நீர்) வழங்கி, ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்து வழிபடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வீட்டின் பூஜை அறையில் மாரியம்மன் அல்லது காளியம்மன் படத்திற்குப் பூக்களிட்டு, விளக்கேற்ற வேண்டும். வேப்பிலை அம்மனுக்கு உகந்தது என்பதால், பூஜையின் போது வேப்பிலையைச் சமர்ப்பிப்பது விசேஷம். அதனால் இந்த ஆடி ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டில் வேப்பிலையை மறக்காதீங்க.
ஆலய வழிபாடு: மாலையில் அருகில் உள்ள அம்மன் அல்லது மாரியம்மன் கோவிலுக்குச் சென்று நெய் தீபமேற்றி, ராகு கால வேளையில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது தோஷங்களை நீக்கும்.

ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்குக் குளிர்ச்சியான மற்றும் பாரம்பரிய உணவுகளைப் படைப்பது வழக்கம்: கேழ்வரகு (ராகி) கூழ் காய்ச்சி, அதனுடன் சின்ன வெங்காயம், மோர் கலந்து அம்மனுக்குப் படைத்து, பின் அதனைப் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் தானமாக வழங்குவது இந்த நாளின் மிக முக்கிய வழிபாடாகும். கோடை வெப்பத்தைத் தணிக்கும் பானகம் மற்றும் நீர்மோரை நைவேத்தியமாகப் படைக்கலாம்.
அம்மனுக்கு உகந்த சர்க்கரைப் பொங்கல் அல்லது துள்ளு மாவு (பச்சரிசி மாவு, வெல்லம் கலந்தது) செய்து படைக்கலாம். ஆடி ஞாயிறு தினமான இன்று அம்மனைத் தீவிரமாக வழிபடக் குடும்பத்தில் உள்ள நோய்களும், தீய சக்திகளும் நீங்கி, ஆரோக்கியமும் நல்வாழ்வும் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த வருடத்தில் இருந்து ஆடி ஞாயிற்றுக்கிழமை கேழ்வரகு கூழ் காய்ச்சி, நாலு பேருக்காவது தருவதாக வேண்டிக் கொண்டு, அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு துவங்குங்கள். இதுநாள் வரையில் இழுபறியாய் நீடித்து வந்த காரியதடை விலகும். இல்லத்தில் சந்தோஷம் பொங்கும்.
