இன்று கடைசி தேதி... மத்திய அரசில் 450 காலி பணியிடங்கள்... முழு விபரம்!
மத்திய பொதுச்சேவை ஆணையம் (UPSC) பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள 450-க்கும் மேற்பட்ட உயர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. மொத்தம் 54 விதமான பிரிவுகளின் கீழ் 450 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில் முக்கியமாக டிரக்ஸ் இன்ஸ்பெக்டர்: 186 பணியிடங்கள் (மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ்), அசிஸ்டென்ட் இன்ஜினியர், லீகல் ஆபீசர், கம்பெனி பிராசிகியூட்டர், சயின்டிஃபிக் ஆபீசர் ஆகிய பணியிடங்கள் அடங்கும். விண்ணப்பிக்கும் பதவிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடுகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை/முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்குப் பணி அனுபவமும் கோரப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவினருக்குப் பதவிகளைப் பொறுத்து அதிகபட்ச வயது வரம்பு 30 முதல் 40 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழக்கமான வயது வரம்புத் தளர்வு உண்டு. தகுதியான விண்ணப்பதாரர்கள் UPSC-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பொது, ஓபிசி மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவு ஆண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ₹25 மட்டுமே. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை மட்டுமே ஆன்லைன் விண்ணப்பச் சமர்ப்பிப்பு தளம் செயல்பாட்டில் இருக்கும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள் upsconline.nic.in என்ற இணையதளத்தில் 'One Time Registration முறையில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் மூலம் லாகின் செய்யலாம். தற்போதைய அறிவிப்பில் உள்ள தகுதிகளைச் சரிபார்த்து, சம்பந்தப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை உரிய வடிவத்தில் பதிவேற்றம் செய்து கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
கடைசி நிமிடத்தில் ஏற்படும் இணையதள நெரிசல் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்க, விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் மாலை 6 மணிக்கு முன்பாகவே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, அதன் நகலை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
