இன்று கடைசி தேதி... மிஸ் பண்ணாதீங்க... தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - முழு விபரம்!
மத்திய அரசின் 2026-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தகுதியான ஆசிரியர்கள் அனைவரும் இன்று ஜூலை 10-ம் தேதி நிறைவடைவதற்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆசிரியர்களுக்குப் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இன்று கடைசி நாள் என்பதால், விண்ணப்பிக்க தவறாதீங்க.
ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர் சேர்க்கை மேம்பாடு மற்றும் கல்வித்துறையில் அவர்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசால் இந்தத் தேசிய நல்லாசிரியர் விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக இன்று மாலைக்குள்தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களைச் சரிபார்த்துத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வது குறித்துப் பள்ளிக்கல்வி இயக்குநர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையிலான மாவட்ட தேர்வுக்குழுவினர், பெறப்பட்ட விண்ணப்பங்களை நெறிமுறைகளின்படி தீர ஆராய வேண்டும். அதன்பின், தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களது இறுதிப் பட்டியலை ஜூலை 14ம் தேதி முதல் ஜூலை 21-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
இந்தத் தேர்வு செயல்முறையின் போது எவ்விதமான புகாருக்கும், முறைகேடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேர்மையான முறையில் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்களின் பட்டியலை மாநில அளவிலான குழுவினர் மீண்டும் பரிசீலித்து, இறுதிப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு (கல்வி அமைச்சகம்) அனுப்பி வைப்பார்கள். இறுதித் தேர்வுக்குழு மூலம் நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கு, வருகிற செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி கௌரவிப்பார்.
