ITR தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்... ரீஃபண்ட் சிக்கலின்றி கிடைக்க இந்த 7 தவறுகளைச் செய்யாதீங்க!

 
ITR ஐடிஆர் டேக்ஸ் ரீபண்ட் வருமான வரி

2025-26ஆம் நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றோடு நிறைவடைகிறது. இந்த முறை கடைசித் தேதி நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என நிபுணர்கள் எச்சரித்துள்ளதால், அபராதத்தைத் தவிர்க்க உடனடியாகத் தாக்கல் செய்வது அவசியமாகும்.

இன்றைய கெடுவிற்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யத் தவறினால் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூ. 5,000 தாமதக் கட்டணம் செலுத்த நேரிடும். ரூ.5 லட்சத்திற்குள் வருமானம் உள்ளவர்கள் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஐடிஆர்

தாக்கல் செய்யும்போது தவிர்க்க வேண்டிய 7 முக்கிய தவறுகள்

வரித் திரும்பப் பெறுதல் எவ்விதத் தடங்கலும் இன்றி உடனுக்குடன் உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கு, இந்த தவறுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்:

ஃபார்ம் 16-ஐ மட்டும் நம்பியிருக்காதீர்கள்:

சம்பளதாரர்கள் நிறுவனம் வழங்கும் Form 16-ஐ மட்டும் வைத்துத் தாக்கல் செய்யக் கூடாது. சேமிப்புக் கணக்கு வட்டி, ஃபிக்ஸ்ட் டெபாசிட் வட்டி, பங்குகள் மூலம் கிடைத்த டிவிடெண்ட் மற்றும் வாடகை வருமானம் ஆகியவற்றையும் சேர்த்துத் தாக்கல் செய்ய வேண்டும்.

AIS மற்றும் Form 26AS ஒப்பீடு:

உங்களின் வருடாந்திர தகவல் ஸ்டேட்மெண்ட் Annual Information Statement (AIS) மற்றும் Form 26AS ஆகியவற்றில் உள்ள வருமான விவரங்கள், நீங்கள் தாக்கல் செய்யும் கணக்குடன் சரியாக ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சரியான ITR படிவத்தைத் தேர்ந்தெடுங்கள்:

தவறான ITR படிவத்தைத் (ITR-1, ITR-2 போன்றவை) தேர்ந்தெடுத்தால், நீங்கள் தாக்கல் செய்த கணக்கு செல்லாததாகி ரீஃபண்ட் நடைமுறை கடுமையாகப் பாதிக்கப்படும்.

வருமான வரி கணக்கு செலுத்த கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!

கட்டாய மின்-சரிபார்ப்பு:

வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பித்த உடனே பணி முடிந்துவிடுவதில்லை. அதை ஆதார் ஓடிபி அல்லது நெட் பேங்கிங் மூலம் சரிபார்ப்பு செய்யாவிட்டால் கணக்கு செல்லாததாகி விடும்.

போலி வரி விலக்குகளைத் தவிர்க்கவும்:

தகுதியில்லாத வரி விலக்குகளைக் கோருவது மற்றும் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், சொத்து விற்பனை மூலமாகக் கிடைத்த மூலதன ஆதாயங்களை மறைப்பது போன்ற தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.

வங்கி கணக்கு விவரங்களைச் சரிபாருங்கள்:

ரீஃபண்ட் தொகை வந்து சேர வேண்டிய வங்கிக் கணக்கின் விவரங்கள் சரியாக உள்ளதா என்றும், அந்த வங்கிக் கணக்கு 'Pre-validated' செய்யப்பட்டுள்ளதா என்றும் சரிபார்க்கவும்.

தனிப்பட்ட விவரங்களில் முரண்பாடு:

உங்களது பான், அடையாள ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளில் தகவல்கள் ஒன்றோடொன்று மாறுபடாமல் சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.