இன்று ஆடி கடைசி ஞாயிறு... அதிகாலையிலேயே தமிழகம் முழுவதும் அம்மன் கோயில்களில் குவிந்த பெண்கள்... பொங்கல் வைத்து வழிபாடு!
ஆடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, தமிழகமெங்கும் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் விடியற்காலை முதலே ஏராளமான பெண் பக்தர்கள் குவிந்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஆடி கடைசி ஞாயிறு என்பதால், வேப்பிலை ஆடை அணிந்தும், பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கோயில்களை நோக்கி ஊர்வலமாக வந்த வண்ணம் உள்ளனர். அம்மனுக்கு உகந்த ஆடி கூழ் காய்ச்சி, சிறப்புப் பூஜைகள் செய்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகம் செய்யும் நிகழ்ச்சிகள் தெருவெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

சமயபுரம் மாரியம்மன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, பண்ணாரி மாரியம்மன், சென்னை காளிகாம்பாள் உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் சந்தனக் காப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனைத் தரிசித்து வருகின்றனர்.
கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினரும் கோயில் நிர்வாகத்தினரும் சிறப்புப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்துள்ளனர்.
