இன்று ‘மாங்கனித் திருவிழா’வின் மகத்துவம்... இறைவனால் ‘அம்மையே’ என அழைக்கப்பட்ட புனிதவதியின் பக்தி வரலாறு!
அறுபத்து மூன்று நாயன்மார்களில் தனித்துவமான பக்திச் சிறப்பைப் பெற்று, சிவபெருமானாலேயே நேரடியாக ‘அம்மையே’ என்று அன்போடு அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். இவரது பக்தி மற்றும் தியாக வரலாற்றை உலகிற்கு உணர்த்தும் புகழ்பெற்ற ‘மாங்கனித் திருவிழா’, இன்று காரைக்கால் அம்மையார் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
காரைக்காலில் வாழ்ந்து வந்த பெரும் வணிகரான தனதத்தன் என்பவரின் மகள் புனிதவதி. சிறு வயது முதலே சிவபெருமான் மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவரை, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வணிகர் பரமதத்தர் என்பவருக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்.
ஒரு நாள் பரமதத்தன் தான் வாங்கிய இரண்டு சுவையான மாங்கனிகளைத் தனது பணியாளர்கள் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அதே நேரத்தில், பசியோடு வந்த ஒரு சிவனடியாருக்குப் புனிதவதி அன்போடு உணவளித்தார். அப்போது கூட்டுக்கறி ஏதும் இல்லாததால், தன் கணவர் கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை அந்த அடியாருக்குப் பல்லாண்டு வாழ்த்துகளுடன் பரிமாறினார்.
மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்குப் புனிதவதி மீதமிருந்த ஒரு மாங்கனியைப் பரிமாறினார். அதன் சுவை அலாதியாக இருக்கவே, மற்றொரு கனியையும் எடுத்து வருமாறு பரமதத்தன் கேட்டான்.

சிவனடியாருக்குக் கொடுத்துவிட்ட விபரத்தைக் கூறினால் கணவன் கோபித்துக் கொள்வான் என்று அஞ்சிய புனிதவதி, உடனே பூஜை அறைக்குச் சென்று சிவபெருமானை உருகி வேண்டினார். அப்போது, அவரது கைகளில் தெய்வீகச் சுவையுடன் கூடிய ஒரு மாங்கனி திடீரென வந்து சேர்ந்தது.
மனமகிழ்ந்த புனிதவதி அந்தக் கனியைக் கணவருக்குப் பரிமாறினார். ஆனால், அதன் தேவாமிர்த சுவையை உணர்ந்த பரமதத்தன், "இது முதலில் சாப்பிட்ட கனியை விடப் பன்மடங்கு சுவையாக உள்ளதே, இது எங்குச் கிடைத்தது?" எனச் சந்தேகத்துடன் கேட்டான். புனிதவதி உண்மையை உரைக்க, அதனை நம்ப மறுத்த பரமதத்தன், "உன் சிவன் கொடுத்தது உண்மை என்றால், மீண்டும் ஒரு கனியை வரவழைத்துக் காட்டு" என்று சவால் விடுத்தான்.
புனிதவதி மீண்டும் சிவபெருமானை வேண்டி நிற்க, உடனே அவரது கையில் இரண்டாவது மாங்கனியும் வந்து விழுந்தது. இதனைக் கண்டு அச்சமடைந்த பரமதத்தன், "நீ சாதாரணப் பெண் அல்ல, தெய்வப் பெண்; உன்னோடு குடும்பம் நடத்த எனக்குத் தகுதியில்லை" என்று கூறி அவரைப் பிரிந்து பாண்டிய நாடு சென்று, வேறொரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான்.
தனது அழகும் இளமையும் கணவனுக்காக மட்டுமே என்று வாழ்ந்த புனிதவதி, அவர் தன்னைத் தெய்வமாக வழிபடத் தொடங்கியதை அறிந்து, "இனி எனக்கு இந்த மனித அழகும், சதையாலான உடம்பும் தேவையில்லை" என எண்ணிச் சிவபெருமானிடம் 'பேயுருவம்' வேண்டிப் பெற்றார். சிவபெருமான் அவ்வாறே வரம் அளித்துத் தனது திருத்தாண்டவத்தைக் காட்டி, திருவாலங்காட்டில் தனது நடனத்தைக் கண்டு மகிழுமாறு அம்மையாரைப் பணித்தார்.

காரைக்கால் அம்மையாரின் இந்த அற்புத நிகழ்வுகளை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் ஆனி மாதப் பௌர்ணமி தினத்தை ஒட்டி இத்திருவிழா காரைக்காலில் கொண்டாடப்படுகிறது.
இன்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, சிவபெருமான் பிச்சாடனர் கோலத்தில் (அடியார் வேடம்) வீதி உலா வருகிறார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வீடுகளின் மாடி மற்றும் உயரமான இடங்களிலிருந்து மாங்கனிகளைப் பிச்சாடனர் மீது வாரி இறைத்து (வீசி) தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.
இந்த விழாவின் போது வீசப்படும் மாங்கனிகளைத் தங்களது முந்தானையில் பிடித்துச் சாப்பிடும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு, விரைவில் மழலைச் செல்வம் கிட்டும் என்பது இன்றுவரை பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
