இன்று பிரதமர் மோடி - டிரம்ப் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை... மணிலாவில் குவாட் உச்சி மாநாட்டில் எகிறும் எதிர்பார்ப்பு!
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய 'குவாட்' அமைப்பின் உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நாளை மாலை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளனர்.
ஆசியான் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தக் குவாட் மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீசி மற்றும் ஜப்பான் பிரதமர் டகாயிச்சி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஒலிவியா வேல்ஸ் கூறுகையில், "இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான பொதுவான நலன்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படும். டிரம்பின் தலைமையின் கீழ் குவாட் அமைப்பு வெறும் பேச்சுடன் நின்று விடாமல், பிராந்தியத்தின் சவால்களை எதிர்கொண்டு திறம்படச் செயல்படும் கூட்டமைப்பாகத் திகழ்கிறது" என்று தெரிவித்தார்.
மணிலாவில் நடைபெறும் குவாட் தலைவர்களின் சந்திப்பு மற்றும் மாநாடுகள் நிறைவடைந்த பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கிருந்து நேரடியாகச் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள டெலாவேரில் அப்போதைய அதிபர் ஜோ பைடன் தலைமையில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்ற நிலையில், தற்போது மணிலாவில் நடைபெறும் இந்தச் சந்திப்பு சர்வதேச அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
