இன்னைக்கு கல்யாணம்... நேற்று மணமகன் கண்முன்னே விபத்தில் பலியான மணப்பெண்.. கதறும் உறவினர்கள்!
இன்று காலை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மண்டபத்தில் மணமகன், மணப்பெண் வீட்டார், உறவினர்கள் என்று நூற்றுக்கணக்கில் குவிந்திருந்தனர். அனைவரும் திருமண வேலைகளை சந்தோஷமாகப் பார்த்து வந்த நிலையில், நேற்று மணமகன் கண்முன்னே கார் மோதி மணப்பெண் உயிரிழந்த சம்பவம் மதுரை முழுக்கவே பதற வைத்துள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே திருமணத்திற்கு முந்தைய நாள் நிகழ்ந்த கோர விபத்தில் செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மரிய வெல்சியாவுக்கும் (26), ஜெப பாஸ்டின் என்பவருக்கும் நாளை திருமணம் நடைபெறவிருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன.

செவிலியர் தேர்வு எழுதுவதற்காக மரிய வெல்சியாவை ஹோண்டா பைக்கில் மணமகன் ஜெப பாஸ்டின் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த கார் ஒன்றின் டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அவர்கள் சென்ற பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மரிய வெல்சியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இடிபாடுகளில் சிக்கிக் காயம்டைந்த மணமகன் ஜெப பாஸ்டின் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை திருமணம் கோலாகலமாக நடக்கவிருந்த சூழலில், மணமகள் கண்முன்னே விபத்தில் உயிரிழந்த நிகழ்வு குடும்பத்தினரையும் உறவினர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
