பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை... நிதி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

 
toilet toilet

நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் கழிப்பறைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றும் இல்லை என்ற அவல நிலையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சுமார் 98592 பள்ளிகளில் மாணவிகளுக்கான பயன்பாட்டு கழிப்பறை வசதிகள் இல்லை என்பதும், 61540 பள்ளிகளில் எவ்வித கழிப்பறை வசதிகளுமே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. நாடு தழுவிய அளவில் கல்வித் தரம் பேசப்பட்டாலும், இத்தகைய அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகரும் கழிப்பறை!வைரலாகும் அசத்தல் கண்டுபிடிப்பு1

கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிகளுக்கான மின்சார வசதி 91.9 சதவீதமாக உயர்ந்துள்ள போதிலும், இன்றும் சுமார் 119000 பள்ளிகளில் செயல்படும் நிலையிலான மின் இணைப்புகள் இல்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் 14505 பள்ளிகளில் போதிய குடிநீர் வசதியும், சுமார் 59829 பள்ளிகளில் மாணவர்களுக்கான கை கழுவும் வசதிகளும் தற்போது வரை இல்லை. நாட்டின் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வெறும் 51.7 சதவீதம் மட்டுமே அறிவியல் ஆய்வகங்களைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையில் கல்விக்காக இந்தியா செலவிடும் தொகை மற்ற நாடுகளை விடக் குறைவாக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 5.9 சதவீதத்தை கல்விக்காகச் செலவிடும் நிலையில், இந்தியா வெறும் 4.6 சதவீதத்தை மட்டுமே ஒதுக்குகிறது. இந்த நிதி ஒதுக்கீட்டுக் குறைபாடே பள்ளிகளில் நிலவும் அடிப்படை வசதிப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.