நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 
டோல்கேட் டோல்கேட்

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கக் கூடிய வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் ஆண்டுதோறும் ஜூன் 1 ஆம் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள 60 முக்கிய சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பு கோடை விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குத் திரும்பும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுங்கச்சாவடி

இந்த புதிய கட்டண மாற்றத்தின்படி, சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் இலகுரக வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான கட்டணம் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட சுங்கச்சாவடி வழியாக அடிக்கடி பயணிக்கும் உள்ளூர் வாகனங்களுக்கான மாதாந்திர பயண அனுமதிச் சீட்டு எனப்படும் பாஸ் கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த திடீர் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் வாடகை உயர்ந்து, விலைவாசி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சுங்கச்சாவடி

அதே நேரத்தில் விபத்துக்களைத் தவிப்பதற்காகவும், சாலைகளைச் சீரமைப்பதற்காகவும் இந்த ஆண்டுவாரியான கட்டண உயர்வு அவசியமான ஒன்று என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் முறையான சாலை வசதிகள் இல்லாத சில இடங்களிலும் இத்தகைய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய கட்டண விகிதங்களின் முழு விபரங்களும் அந்தந்த சுங்கச்சாவடி முகப்புகளில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.