தொடர் மழையால் அழுகிய தக்காளிப் பயிர்கள்.. வீதியில் கொட்டி கதறும் விவசாயிகள்!
Oct 19, 2026, 12:40 IST
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக தக்காளிச் செடிகளில் நோய் தாக்குதல் ஏற்பட்டு பழங்கள் அழுகி வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.

அப்பகுதியில் அறுவடை செய்யப்படும் தக்காளிகள் பறிக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே அழுகிப் பாழாவதால், சந்தையில் அவற்றின் விலை மிகவும் பரிதாபகரமான அளவுக்குச் சரிந்துள்ளது. சந்தையில் நல்ல ரக தக்காளிப் பெட்டி ஒன்று ரூ.400 வரை விற்பனையாகும் சூழலில், மழையால் பாதிக்கப்பட்ட தக்காளிகள் 150 ரூபாய்க்குக்கூட விலைபோகாத நிலை ஏற்பட்டுள்ளது.

அழுகும் நிலையில் உள்ள தக்காளிகளை வியாபாரிகள் அறவே வாங்க மறுத்துவிட்டதால், மனவேதனையடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளிகளைச் சாலையோரங்களிலேயே கொட்டிவிட்டுச் செல்லும் அவல நிலை உருவெடுத்துள்ளது.
