தக்காளி விலை கிடுகிடு உயர்வு! ரூ.50-ல் இருந்து ரூ.70-ஆக அதிகரிப்பு

 
மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

 

தமிழகத்தில் தக்காளியின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.ஒட்டன்சத்திரம் சந்தைக்கு வழக்கமாக தினமும் சுமார் 15 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரை வரத்து இருக்கும் நிலையில், தற்போது சுமார் 3 ஆயிரம் பெட்டிகள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. இதனால் சந்தையில் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.

முன்பு முதல் ரக தக்காளி பெட்டி ரூ.250 முதல் ரூ.300 வரையிலும், இரண்டாம் ரக தக்காளி பெட்டி அதே அளவிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் ரக பெட்டி ரூ.700-க்கும், இரண்டாம் ரக பெட்டி ரூ.650-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளி

இதன் தாக்கம் சில்லறை விற்பனையிலும் எதிரொலித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி முன்பு ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.70 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

தக்காளி சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக செடிகள் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு வரும் தக்காளியின் அளவு குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போதிய மழை இல்லாததால் தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்ததன் காரணமாக விலை உயர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

தக்காளி வரத்து மேலும் குறைந்தால் வரும் நாட்களில் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையலுக்கு அத்தியாவசியமான தக்காளியின் விலை உயர்வு பொதுமக்களின் அன்றாட காய்கறி செலவில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.