இல்லத்தரசிகள் நிம்மதிப் பெருமூச்சு - ஒரே வாரத்தில் பாதியாக குறைந்தது தக்காளி விலை!
கடந்த சில வாரங்களாக உயர்வைச் சந்தித்து வந்த தக்காளியின் விலை, தற்போது திடீரெனக் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கடலூர் மார்க்கெட்டிற்குத் தக்காளி வரத்து திடீரெனக் குறைந்தது. இதன் காரணமாகப் படிப்படியாக உயர்ந்த விலை, கடந்த வாரம் மொத்த விற்பனையில் 55 ரூபாய்க்கும், சில்லரை விற்பனைக் கடைகளில் கிலோ 60 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டது.

இந்நிலையில், கடலூர் மார்க்கெட்டிற்குத் தக்காளி வரத்து தற்போது மீண்டும் வழக்கமான நிலைக்குத் திரும்பியுள்ளது. இதன் காரணமாகத் தக்காளியின் விலை கிடுகிடுவெனச் சரிந்துள்ளது.
நிலவரப்படி, ஒரு கிலோ தக்காளி மீண்டும் 30 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, கடந்த ஒரே வாரத்தில் மட்டும் கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
