தக்காளி விலை கடும் வீழ்ச்சி... வறட்சியால் கிலோ ரூ.13-க்கு விற்பனை; கதறும் விவசாயிகள்!

 
தக்காளி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவிற்குட்பட்ட குமரலிங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வறட்சி மற்றும் பாசன நீர் பற்றாக்குறை காரணமாகத் தக்காளியின் தரம் குறைந்து, சந்தையில் விலை பயங்கரமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் முதலீடு செய்த தொகையைக் கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

குமரலிங்கம், மடத்துக்குளம், கொழுமம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பு கோடை மற்றும் அதைத் தொடர்ந்த பருவநிலை மாற்றத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது கிணற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி தக்காளிச் செடிகளைப் பராமரித்து வந்தனர்.

தக்காளி

போதிய பாசன நீர் இல்லாததாலும், பயிர்களில் ஏற்பட்ட சில மரபணு சார்ந்த குறைபாடுகள் மற்றும் நோய் பாதிப்புகளாலும் இந்த முறை தக்காளிப் பழங்கள் வழக்கமான அளவை விட மிகச் சிறியதாகவும், போதிய சுவையின்றியும், தரம் குறைந்தும் காணப்படுகின்றன. விளைச்சல் ஓரளவுக்குக் கை கொடுத்த போதிலும், தக்காளியின் தரம் மோசமாக இருப்பதால் சந்தைக்குக் கொண்டு செல்லப்படும் தக்காளிகளை வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்குக் கேட்கின்றனர்.

தற்போது சந்தைகளில் மிக நல்ல தரமான உயர்தரத் தக்காளிகள் ஒரு கிலோ ₹22-க்கு விற்பனையாகும் நிலையில், குமரலிங்கம் பகுதி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் சாதாரண மற்றும் சிறிய ரகத் தக்காளிகள் ஒரு கிலோ வெறும் ₹13 முதல் ₹15 வரை மட்டுமே வியாபாரிகளால் கேட்கப்படுகிறது.

தக்காளி

தக்காளியைப் பறிப்பதற்கான கூலி, கூடை வாடகை மற்றும் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு ஆகியவற்றைக் கணக்கிட்டால், தற்போது கிடைக்கும் ஒரு கிலோ ₹13 என்ற விலை மிகக் சொற்பமானது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குப் பல்லாயிரக்கணக்கில் கடன் வாங்கிச் செலவு செய்துள்ள நிலையில், இந்தத் தொடர் விலை வீழ்ச்சி தங்களை நஷ்டத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறும் குமரலிங்கம் பகுதி விவசாயிகள், தங்களுக்கு அரசு தரப்பில் உரிய நஷ்டஈடு அல்லது மானிய உதவிகளை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.