நாளை பரணி தீபம்... வீட்டில் எந்த இடத்தில், எப்படி ஏற்ற வேண்டும்? எத்தனை விளக்குகள் ஏற்றுவது சிறப்பு?! சரியான நேரம் இது தான்!

 
தீபம் பரணி மகாதீபம் விளக்கு ஒளி

கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருநாளுக்கு முந்தைய நாளில் கொண்டாடப்படும் மிக முக்கியமான விரத மற்றும் வழிபாட்டு நாள் பரணி தீபம் ஆகும். இந்த ஆண்டு பரணி தீபம் நாளை நவம்பர் 23-ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. கார்த்திகை மாதத்தின் முதல் சோமவாரமும் இதே நாளில் அமைந்திருப்பதால், விரதம் இருந்து வீட்டில் தீபமேற்றி வழிபடுவது கூடுதல் சிறப்பைத் தரும் என ஆன்மிக நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. நவம்பர் 23-ஆம் தேதி அதிகாலை 3.20 மணிக்குத் தொடங்கும் பரணி நட்சத்திரம், நவம்பர் 24-ஆம் தேதி அதிகாலை 2.21 மணி வரை நீடிக்கிறது. நவம்பர் 23-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் தீபமேற்றி வழிபாடுகளைத் தொடங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

பரணி நட்சத்திரத்திற்கு அதிதேவதையாக எமதர்மராஜாவும், உரிய கிரகமாகச் சுக்கிரனும் குறிப்பிடப்படுகின்றனர். முன்னோர்கள் நற்கதி அடையவும், துன்பமில்லாத வாழ்வு மற்றும் மோட்சம் கிட்டவும் வேண்டி பரணி தீப வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. கார்த்திகை விரதம் இருப்பவர்கள் பரணி நாளிலேயே விரதத்தைத் தொடங்குவது வழக்கமாக உள்ளது.

தீபம் கார்த்திகை விளக்கு

பரணி நாளில் அதிகாலையில் நீராடி விரதத்தைத் தொடங்க வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் காலையில் உணவு எடுத்துக்கொண்டு, பகல் மற்றும் இரவில் பால், பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். மறுநாள் கார்த்திகை நாளிலும் விரதத்தைத் தொடரலாம் எனக் கூறப்படுகிறது.

பரணி தீபத்தன்று ஒரு தாம்பாலத்தில் ஐந்து அகல் விளக்குகளை வட்ட வடிவில் வைத்து, வெளிப்புறமாகப் பார்த்த படி ஏற்ற வேண்டும். ஒவ்வொரு விளக்கும் வெவ்வேறு திசையை நோக்கி இருக்குமாறு அமைத்து, விளக்குகளுக்கு முன்பாக ஒவ்வொரு மலர் வைக்க வேண்டும்.

இந்த ஐந்து விளக்குகளையும் நெய்யால் ஏற்றுவது மகாலட்சுமி மற்றும் அஷ்டலட்சுமிகளின் அருளைப் பெற்றுத் தருவதாகவும், இறைவனின் பஞ்சபூத தத்துவத்தை உணர்த்துவதாகவும் கருதப்படுகிறது. இந்த ஐந்து விளக்குகளை ஏற்றி அந்தத் தாம்பாலத்தை அப்படியே பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இதனுடன் பூஜை அறையில் வழக்கமாக ஏற்றப்படும் விளக்குகளையும் ஏற்ற வேண்டும்.

அகல் விளக்கு தீபம்

கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விளக்கேற்றி வரும் நிலையில், பரணி நாள் முதல் வீடு முழுவதும் விளக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஏற்றத் தொடங்க வேண்டும். வீட்டு வாசல், நிலைவாசல், பூஜை அறை ஆகிய இடங்களுடன் மாடி, துளசி மாடம், கிணற்று மேடு மற்றும் மாட்டுத்தொழுவம் உள்ளவர்கள் அங்கேயும் விளக்கு ஏற்றி வைக்கலாம்.

கார்த்திகை மாத முதல் சோமவாரத்தில் பரணி தீபம் அமைந்திருப்பதால், சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தில் பங்கேற்பது சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது. வீட்டிலேயே வழிபடுபவர்கள் சுத்தமான நீர் அல்லது தீர்த்தம் நிரப்பிய வலம்புரிச் சங்கில் பன்னீர், ஒரு நாணயம் மற்றும் மலர் வைத்து இறைவன் முன் வைத்து வழிபடலாம். அன்றைய தினம் சிவபுராணம், கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம் அல்லது கந்தர் அனுபூதி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பாராயணம் செய்து, பால், பழம் அல்லது இனிப்புகளை நைவேத்தியமாகப் படைத்து வழிபடலாம்.