“நாளை கடைசி... நரகத்தை சந்திப்பீங்க”.. ஈரானுக்கு ட்ரம்ப் கொடுத்த இறுதி வார்னிங் - உலக நாடுகளிடையே பதற்றம்!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதால், உலக நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஈரானுக்கு கெடு விதித்து வந்த அதிபர் டிரம்ப், தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் காட்டமான இறுதி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். "எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7, 2026) இரவு 8 மணிக்குள் (அமெரிக்க நேரம்) ஹார்முஸ் நீரிணையைத் திறந்து கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், செவ்வாய்க்கிழமை என்பது ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தகர்க்கப்படும் நாளாக இருக்கும். ஈரான் நரகத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்" எனத் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா ஈரான்

அதே நேரத்தில், "ஈரான் உடன்பாட்டிற்கு வர நல்ல வாய்ப்பு உள்ளது; பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் சுமார் 20% இந்தப் குறுகிய கடல் வழித்தடம் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இதனை ஈரான் மூடியுள்ளதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

ஈரான் அமெரிக்கா போர் ட்ரம்ப்

ஏப்ரல் 3-ம் தேதி ஈரானிய வான் எல்லைக்குள் பறந்த அமெரிக்காவின் F-15E போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவர் இன்னும் தேடப்பட்டு வருகிறார்.

அமெரிக்காவின் உத்தரவுக்காகக் காத்திருப்பதாகவும், ஈரானின் எரிசக்தி மையங்களைத் தாக்கத் தயாராக இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. சிவிலியன் கட்டமைப்புகளைத் தாக்குவது 'போர்க்குற்றம்' என ஐநா சபையில் ஈரான் முறையிட்டுள்ளது.