இன்றிரவு வெள்ளித்தேர்... திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் கோ ரதத்தில் சுவாமி வீதியுலா!

 
திருச்செந்தூர் மாசித் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உலகப்புகழ் பெற்ற மாசித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளான இன்று, சுவாமி குமரவிடங்கப் பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழா, நாள்தோறும் பல்வேறு வாகன சேவைகளுடன் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

ஆறாம் திருநாளான இன்று காலை, சுவாமி குமரவிடங்கப் பெருமான் 'கோ ரதத்தில்' (பசு உருவம் தாங்கிய தேர்) எழுந்தருளினார். திரளான பெண் பக்தர்கள் மற்றும் குழந்தைகள் வடம் பிடித்து இழுக்க, சுவாமி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து அருள்பாலித்தார்.

இன்று இரவு மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப் பெருமான் பிரம்மாண்டமான வெள்ளித் தேரிலும், தெய்வானை அம்மன் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வரவுள்ளனர்.

திருச்செந்தூர் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா... நாள் நேரம் அறிவிப்பு!

ஆறாம் திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி, திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகத் திருச்செந்தூர் வந்தடைந்துள்ளனர். பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.