பழுதடைந்த முகப்பு விளக்குகளால் மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் இயக்கப்பட்ட பேருந்து!
கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு (KKRTC) சொந்தமான அரசுப் பேருந்து ஒன்று, நள்ளிரவில் முகப்பு விளக்குகள் (Headlights) எரியாத நிலையில் ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கலபுரகி நகர பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 84 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்சோலி என்ற பகுதிக்கு இரவு 7:30 மணிக்கு வழக்கம்போல் இந்த இறுதிப் பேருந்து சேவை புறப்பட்டுள்ளது. இப்பயணத்தின் போது பேருந்தின் இரண்டு முகப்பு விளக்குகளும் திடீரென முற்றிலும் பழுதடைந்து வேலை செய்யாமல் நின்றுள்ளன.
கார் இருள் சூழ்ந்த நள்ளிரவு நேரத்தில், காடுகளுக்கு இடையே உள்ள நெடுஞ்சாலையில் முகப்பு விளக்குகள் இன்றிப் பேருந்தை இயக்குவது சாத்தியமற்றது என்பதால், நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இருவரும் இணைந்து ஒரு விசித்திரமான முடிவை எடுத்துள்ளனர். அதன்படி ஓட்டுநருக்குச் சாலையின் போக்கை ஓரளவாவது காட்டுவதற்காக, நடத்துனர் தனது மொபைல் போனில் உள்ள டார்ச் லைட்டை (Torch) ஆன் செய்து ஜன்னல் வழியாகப் பிடித்துள்ளார். அந்த மிகச் சிறிய மொபைல் வெளிச்சத்தின் உதவியை மட்டுமே நம்பிக் கொண்டு, ஓட்டுநரும் அடர்ந்த இருளில் பேருந்தை மிகவும் மெதுவாகத் தொடர்ந்து இயக்கியுள்ளார்.
பேருந்தின் விளக்குகள் பழுதடைந்த போதிலும், வழியில் மாற்றுப் பேருந்து வசதி ஏதும் செய்யப்படாமல் பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து ஆபத்தான முறையில் பயணம் தொடரப்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் இந்த அவல நிலையைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்பொழுது இணையத்தில் காட்டுத்தீயாக விஸ்வரூபம் எடுத்து வைரலாகி வருகிறது.
