நர்மதா ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 9 பேர் பலி, 6 பேர் மாயம் !
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பார்கி அணையில் நேற்று பயங்கர படகு விபத்து நிகழ்ந்தது. அணையின் அழகைப் ரசிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற சொகுசுப் படகு ஒன்று எதிர்பாராத விதமாக நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தச் சொகுசுப் படகில் சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 31 பேர் பயணித்துள்ளனர். அணையின் மையப்பகுதியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தண்ணீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 9 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதே சமயம், தண்ணீரில் மூழ்கி மாயமான எஞ்சிய 6 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா சென்ற இடத்தில் நேரிட்ட இந்தத் துயரச் சம்பவம் ஜபல்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படகில் அதிகப்படியான பயணிகள் ஏற்றப்பட்டதே விபத்திற்குக் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
