சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து... இளம்பெண் பலி - 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே ஆன்மிகப் பயணம் மேற்கொண்டவர்கள் சென்றுக் கொண்டிருந்த சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இளம்பெண் ஒருவர் பலியானார். பேருந்தில் பயணித்தவர்களில் 12 பேர் படுகயாமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர், ஒரு மினி சுற்றுலா பேருந்தில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் ஆவடி அருகே உள்ள வெள்ளானூர் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத் தடுப்பின் மீது பயங்கரமாக மோதி, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி ரிவேகா (20) என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பேருந்தில் பயணம் செய்த மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து வந்த ஆவடி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார், உயிரிழந்த இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை நேரம் என்பதால் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்தாரா அல்லது வாகனத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
