கடற்கரையில் பாறையில் அமர்ந்து 'ரீல்ஸ்' எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு!

 
கடற்கரை ரீல்ஸ் அலை பாறை

கோவா மாநிலத்தின் புகழ்பெற்ற கடற்கரையான பகா கடற்கரையில், பாறையின் மீது அமர்ந்து செல்போனில் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த சுற்றுலா பயணி ஒருவர், எதிர்பாராத விதமாக வந்த ராட்சத அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஹாஸ் அஷ்பக் மசாலி (33). இவர் நேற்று முன்தினம் கோவா மாநிலத்திற்குச் சுற்றுலா சென்றிருந்தார். கோவாவின் பகா கடற்கரைப் பகுதியில் உள்ள ஆபத்தான பாறைகளின் மீது ஏறி அமர்ந்த மசாலி, கடலின் அழகை ரசித்தபடி தனது செல்போனில் புகைப்படங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கான வீடியோ ரீல்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, கடலில் வழக்கத்திற்கு மாறாக அலைகளின் சீற்றம் மிக ஆக்ரோஷமாக இருந்தது. மசாலி பாறையின் மீது அலைபேசியில் மும்முரமாக இருந்த நேரத்தில், திடீரென எழும்பிய இமாலய ராட்சத அலையொன்று அவர் அமர்ந்திருந்த பாறையை முழுமையாக மூழ்கடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த அலையின் வேகம் மசாலியைக் கடலுக்குள் சுருட்டி இழுத்துச் சென்றது. ஆழ்கடலில் வீசிய பயங்கரமான நீரோட்டத்தில் சிக்கிய அவர், தண்ணீரில் மூழ்கி அலறித் துடித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கடற்கரை பாதுகாப்புப் போலீசாரும், அவசரக்கால மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கடலில் மூழ்கிய மசாலியை மீட்க மீட்புக்குழுவினர் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் களமிறங்கினர்.

இருப்பினும், கடலின் சீற்றம் மிகவும் பயங்கரமாகவும், அலைகள் ஆக்ரோஷமாகவும் இருந்ததால் மீட்பப் பணியைத் தொடர முடியாமல் அதிகாரிகள் கடும் சவால்களைச் சந்தித்தனர். இந்த நிலையில், பல மணி நேரத் தீவிர தேடுதலுக்குப் பிறகு, சஹாஸ் அஷ்பக் மசாலியின் உடல் கடலால் அடித்து வரப்பட்டு அலைகளின் மூலம் கரை ஒதுங்கியது.

கரை ஒதுங்கிய அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்விற்காக  அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோவா போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலாத் தளங்களில் ஆபத்தான பாறைகள் மற்றும் நீர்நிலைகளின் அருகில் நின்று கொண்டு செல்போன்களில் ஆபத்தான முறையில் புகைப்படங்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனப் போலீசார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.