குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் தடை!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து கணிசமாகக் குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாகக் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய பிரதான அருவிகளில் திடீரெனத் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நேற்று அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துத் தடை விதிக்கப்பட்ட நிலையில், மாலையில் நீர்மட்டம் சீரானதால் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அருவிகளுக்கு வரும் நீரின் அளவு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு வனத்துறை மற்றும் காவல் துறையினர் மீண்டும் தடை விதித்துள்ளனர். அருவிப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
