குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

 
குற்றாலம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகக் குற்றாலத்தின் முக்கிய அருவிகளில் கடந்த சில நாட்களாகக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்குத் தென்காசி மாவட்ட நிர்வாகத்தால் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

குற்றாலம் ஐந்தருவி

தற்போது நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்து நீர்வரத்து மிதமான அளவுக்கு வந்ததைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடையை நிர்வாகம் முறைப்படி விலக்கிக்கொண்டுள்ளது.

தளர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் நின்று உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இருப்பினும், நீர்வரத்தைக் காவல்துறையினரும் வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆபத்தான முறையில் குளிப்பதைத் தவிர்க்கவும், எச்சரிக்கைப் பலகைகளைப் பின்பற்றவும் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.