சோகம்... காட்டு யானை மிதித்து 100 வயது சாமியார் உயிரிழப்பு!

 
யானை காட்டுயானை

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், கத்தர்னியாகாட் வனவிலங்கு சரணாலயப் பகுதியில், காட்டுயானை மிதித்து, 100 வயது சாமியார் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹஜரிபூர்வா கிராமத்தைச் சேர்ந்த பாபா சுரேஷ் தாஸ் எனும் சாமியார், கடந்த 60 ஆண்டுகளாக அந்த வனப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றிற்குத் தொடர்ந்து சென்று வந்துள்ளார். அவ்வப்போது இரவு நேரங்களிலும் அந்தக் கோவிலிலேயே சாமியார் பாபா சுரேஷ் தங்கி விடுவதும் வழக்கம்.

யானை

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவு சுமார் 8:05 மணி அளவில், பாபா சுரேஷ் தாஸ் கோவிலில் தங்கியிருந்த போது, அந்த பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்கிருந்த குடிசையைத் தாக்கி, சேதப்படுத்தி உள்ளது. அப்போது, யானையிடம், "எல்லாவற்றையும் அழித்து விட்டால் நாங்கள் எங்கே தங்குவது?" என்று பாபா சுரேஷ் தாஸ் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த யானை, அவரைத் துரத்திப் பிடித்துத் தனது கால்களால் மிதித்துள்ளது.

யானை தாக்கியதில் அவரது கால்கள் மற்றும் உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்தப் பகுதியில் கடந்த 30 மணி நேரத்தில் நடக்கும் இரண்டாவது யானை தாக்குதல் இதுவாகும். இதற்குச் சரியாக 24 மணி நேரத்திற்கு முன்புதான், லகிம்பூரைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது யானை தாக்கி உயிரிழந்தார்.