நாடு முழுவதும் சோகம்... மரண ஓலம்... கொல்கத்தா துர்கா பூஜை விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு - அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

 
கொல்கத்தா துர்கா பூஜை விபத்து கூட்டநெரிசல்

நாடு முழுவதும் பெரும் துயரமாய் சோகத்தை ஏற்படுத்திய கொல்கத்தா விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரபல சர்பாகன் சர்வஜநீன் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட  கூட்ட நெரிசல் மற்றும் பந்தலின் பகுதி இடிந்து விழுந்த விபத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள சோர்பகன் சர்வஜநீன் துர்கோத்சவ் பந்தலில் துர்கா பூஜையைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அப்போது திடீரெனப் பெய்த லேசான மழையின் காரணமாக, பந்தலில் இருந்த மக்கள் உடனடியாக வெளியேறும் வாயில் பகுதியில் தஞ்சம் அடைய முயன்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற முயன்றதால் அங்கு கடுமையான தள்ளுமுள்ளும் நெரிசலும் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் தாளாமல் பந்தலின் ஒரு பகுதியும் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இந்த கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் பலர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் பலர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.

விபத்து

தகவலறிந்ததும் தீயணைப்பு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் உடனடியாக விரைந்து சென்று தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மாநில முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். 

இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ளவும், உதவி பெறவும் கொல்கத்தா காவல்துறை தரப்பில் 8003455678 மற்றும் 03322141310 ஆகிய இரண்டு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன