தீபாவளி நெருக்கத்தில் துயரம்... பட்டாசு ஆலை வெடி விபத்து - 2 பெண்கள் பலி; மீட்புப் பணி தீவிரம்!

 
வேலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் சாலையில் தனியார் பட்டாசு தயாரிப்புக் கூடம் ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம்போல அங்குப் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக ஆலையில் திடீரெனப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

பட்டாசு வெடிவிபத்து

இந்த விபட்டின் வீரியம் அதிகமாக இருந்ததால், பட்டாசு ஆலையில் பணிபுரிந்துகொண்டிருந்த இரண்டு பெண்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்திருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் வேலூர் மற்றும் அணைக்கட்டுப் பகுதிகளில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், ஆலையில் மளமளவெனப் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீ தீயணைப்பு வெடிவிபத்து பட்டாசு

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பட்டாசு தயாரிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்த வேளையில் நிகழ்ந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.