கடலூர் தேர் திருவிழாவில் துயரம்... பட்டாசு வெடி சத்தத்தில் மயங்கி விழுந்த வாலிபர் உயிரிழப்பு!

 
பட்டாசு வெடிவிபத்து பட்டாசு வெடிவிபத்து

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பொயனப்பாடி கிராமத்தில், நடந்த துயரமான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பொயனப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (28). இவர் பிரசித்தி பெற்ற ஆவட்டி கிராமத்துத் தேர் திருவிழாவில் உற்சாகத்தோடு கலந்து கொண்டுள்ளார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாமி வீதி உலா நேற்று முன்தினம் இரவு பக்தி பரவசத்துடன் தொடங்கியது. அப்போது சாமியை வரவேற்கும் விதமாக, வீதியின் இருபுறமும் காதைப்பிளக்கும் வகையிலான அதிவேக பிரம்மாண்ட வெடிகள் மற்றும் வாணவேடிக்கைகள் தொடர்ச்சியாக வெடிக்கப்பட்டன. அந்தப் பயங்கரமான வெடி சத்தத்தின் அதிர்வை தாங்க முடியாத பிரகாஷ், திடீரென நிலைகுலைந்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கூட்டத்தின் நடுவே மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், மயங்கிய பிரகாஷை மீட்டுத் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த அவசரப் பிரிவு மருத்துவர்கள், பிரகாஷ் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

திருவிழாக் கொண்டாட்டத்திற்குச் சென்ற வாலிபர் வெடி சத்தத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த இந்த சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.