சித்திரை திருவிழாவில் சோகம்.. மங்கலதேவி கண்ணகி கோயிலில் இடி தாக்கியதில் போலீஸ் உட்பட 10 பேர் காயம்!

 
இடி இடி

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு திருவிழாவின் போது, இடி தாக்கியதில் 10 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விண்ணேற்றி பாறையில் அமைந்துள்ள 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப்படும் சித்திரை முழு நிலவு திருவிழா நேற்று (மே 1) நடைபெற்றது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனைத் தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் இறுதி நேரமான மாலை வேளையில், கோயில் வளாகப் பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக கோயில் அருகே பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது.

இடி விழுந்த அதிர்வில் அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் அதிகாரி அன்சார் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி ஆகிய இருவருக்கும் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் உடனடியாகக் கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ம்!

இவர்கள் தவிர மேலும் 8 பேர் இடி விழுந்த அதிர்வில் உடல் பலவீனமடைந்து மயக்கமடைந்தனர். அவர்கள் அனைவரும் குமுளி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தேனி மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. திருவிழா நிறைவடையும் தருவாயில் இந்தச் சோகமான விபத்து நிகழ்ந்தது பக்தர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இடி மின்னல் பாதிப்பு ஏற்பட்டபோது அங்கிருந்த வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு மற்ற பக்தர்களைப் பாதுகாப்பாக மலையிலிருந்து கீழே இறக்கினர்.