தேனி வீரபாண்டி திருவிழாவில் துயரம்... ஆற்றில் மூழ்கி 12 வயது சிறுவன் பலி!
தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவைக் காண்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், திருவிழாவிற்கு வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கி 12 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் திருவிழாவிற்கு வந்திருந்த அந்தச் சிறுவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்கிருந்த ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளான். ஆற்றில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்தச் சிறுவன் நீரின் ஆழமான பகுதிக்குச் சென்று, நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளான். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவனது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா ஐபிஎஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று விசாரணை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆற்றங்கரைப் பகுதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகக் குளிப்பதை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் உடனடியாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆபத்தான ஆழமான பகுதிகளுக்கு மக்கள் செல்லக் கூடாது எனப் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோலாகலமாக நடந்து வரும் திருவிழாவில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
