கார்த்திகை தீபம் ஏற்றியதில் விபரீதம்... கட்டிலில் தீப்பற்றி பெண்மணி உடல் கருகி பலி!

 
தீ

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வீட்டில் ஏற்றப்பட்ட அகல் விளக்கிலிருந்து தீப்பற்றியதில், கட்டிலில் படுத்திருந்த 90 வயது மூதாட்டி உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள முடவனூர் கிராமத்தில் நேற்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வீட்டின் திண்ணையில் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. அப்போது எதிர்பாராத விதமாக அகல் விளக்கிலிருந்து பரவிய தீ, வீட்டிற்குள் இருந்த கட்டிலின் போர்வையில் பற்றியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவெனக் கட்டில் முழுவதும் பரவியதில், வயது முதிர்வு காரணமாக எழுந்து ஓட முடியாமல் கட்டிலில் படுத்திருந்த 90 வயது மூதாட்டி தீயில் சிக்கிக் கொண்டார். தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மூதாட்டி கட்டிலுடன் உடல் கருகிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த மானாமதுரை போலீசார் உடனடியாக முடவனூர் கிராமத்திற்கு விரைந்து சென்று, மூதாட்டியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தீ விபத்து நேர்ந்தது எப்படி என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.