சோகம்... முதல்வருடன் மேடையில் உரையாடிய 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை!

 
மாணவி தற்கொலை

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சருடன் மேடையில் அமர்ந்து உரையாடிய 10-ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், பொலாவரம் மாவட்டம் ராம்பசோதாவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெற்றோர் - ஆசிரியர் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் அப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த 'முர்ரம் ஷிவானி' என்ற மாணவி விமரிசையாக உரையாற்றினார். கடினமாக உழைத்து அடுத்த ஆண்டு ‘ஷைனிங் ஸ்டார்’ விருது பெற வேண்டும் என்ற தனது கனவை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். மாணவியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவரை அழைத்துத் தன்னருகே மேடையில் அமரவைத்து பாராட்டிப் பேசினார். நிகழ்ச்சி நிறைவில் மாணவ, மாணவிகளுடன் இணைந்து மதிய உணவும் அருந்தினார். இந்நிலையில், படிப்பில் சிறந்து விளங்கிய மாணவி முர்ரம் ஷிவானி திடீரென தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மாணவியின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உடனடியாகத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் இந்த முடிவிற்கான முகாந்திரம் மற்றும் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.