தமிழகத்தில் தொடரும் அவலம்... போதை ஊசி செலுத்திக்கொண்ட 18 வயது இளைஞர் உயிரிழப்பு!

 
போதை ஊசி

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் சட்டவிரோதமாகப் போதை ஊசி செலுத்திக்கொண்ட பதினெட்டு வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த இளைஞரின் நண்பர்களிடம் பெண்ணாடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திற்கு உட்பட்ட பெண்ணாடம் காமராஜர் தெருப் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 18). இவர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் தனது படிப்பை முடித்துவிட்டு, தற்போது வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறிய அவர், தான் வெளியூருக்கு வேலை தேடுவதற்காகச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இதனை நம்பி வீட்டிலிருந்து அனுப்பிய நிலையில், நேற்று பொன்னேரி திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (18) மற்றும் கருங்குழி தோப்புப் பகுதியைச் சேர்ந்த விஜய்பிரசாத் (18) ஆகிய இருவரும் சேர்ந்து மனோஜ்குமாரை மயங்கிய நிலையில் அவரது வீட்டுக்குத் தூக்கி வந்து படுக்க வைத்துள்ளனர். மகனின் நிலைமையைக் கண்டு பதறிப் போன மனோஜ்குமாரின் தாயார் நிஷாந்தி, உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக் கொண்டு சென்றார்.

போதை பொருள் வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கக் கூடாது! அதிரடி அறிவிப்பு!

ஆனால், மனோஜ்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன்பே அவர் உயிர் பிரிந்துவிட்டதை அறிந்த பெற்றோர் கதறி அழுதனர். தனது மகனின் திடீர் மரணம் மற்றும் அவரது நண்பர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தை மீது சந்தேகம் அடைந்த தாய் நிஷாந்தி, உடனடியாகப் பெண்ணாடம் காவல் நிலையத்தில் தனது மகனின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரிப் புகார் அளித்தார்.

பெண்ணாடம் காவல்துறையினர், தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. மனோஜ்குமார் வெளியூருக்கு வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, தனது நண்பரான பிரசாந்த் என்பவருடன் தங்கியிருந்துள்ளார்.

போதை

இந்நிலையில், நேற்று மதியம் மனோஜ்குமார் தன்னிடம் இருந்த போதை ஊசியைத் தனது கையில் தாமாகவே செலுத்திக் கொண்டுள்ளார். ஊசி போட்ட சில நிமிடங்களிலேயே அவருக்குக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதுடன், திடீரென மயங்கிச் சரிந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று அறியாமல் பதற்றமடைந்த பிரசாந்த், உடனடியாக மற்றொரு நண்பரான விஜய்பிரசாத்தை வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து மயக்க நிலையில் இருந்த மனோஜ்குமாரைக் காப்பாற்ற மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, பயம் காரணமாக அவரது வீட்டிற்கே கொண்டு வந்து படுக்க வைத்து விட்டுச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துப் பெண்ணாடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்புடைய நண்பர்களான பிரசாந்த் மற்றும் விஜய்பிரசாத் ஆகியோரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மனோஜ்குமாருக்கு போதை ஊசி எங்குிருந்து கிடைத்தது? இதன் பின்னணியில் ஏதேனும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அல்லது சப்ளையர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தபிறகு உண்மையான இறப்புக்கான கூடுதல் காரணங்கள் தெரியவரும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.