தமிழகத்தில் தொடரும் அவலம்... கோவையில் மாயமான 2 மாணவிகள் செல்போன் சிக்னல் மூலம் திருச்சியில் மீட்பு!
திருப்பூரில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு விடுமுறைக்காக வந்த 2 பள்ளி மாணவிகள் திடீரென மாயமான நிலையில், தனிப்படை காவல்துறையினர் 24 மணி நேரத்திற்குள் அவர்களைத் திருச்சியில் பத்திரமாக மீட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள், பள்ளி விடுமுறைக்காகக் கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தங்களது தாத்தா வீட்டிற்கு வந்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் எதிர்பாராதவிதமாக திடீரென வீட்டை விட்டு மாயமாகியுள்ளனர்.

சிறுமிகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சிறுமிகளைத் தேட உடனடியாகத் தனிப்படை அமைக்கப்பட்டது.
மாயமான சிறுமிகளின் செல்போன் சிக்னல்களை வைத்துத் தீவிரமாக ஆய்வு செய்த தனிப்படை போலீசார், அவர்கள் திருச்சி மாவட்டம் நவல்பட்டில் உள்ள தங்களது தோழியின் வீட்டில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

உடனடியாக திருச்சிக்குச் சென்ற தனிப்படை காவல்துறையினர், சிறுமிகள் மாயமான 24 மணி நேரத்திற்குள் அவர்களைப் பத்திரமாக மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சிறுமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணம் என்ன, பெற்றோர் கண்டித்ததால் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
