பனிமூட்டத்தால் சோகம்... அமெரிக்காவில் விமான விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் பலி!
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான விஸ்கான்சின் டெல்ஸ் அருகே வனப்பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட மொத்தம் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தின் இறக்கைகளில் பனி உறைந்ததால் ஏற்பட்ட கட்டுப்பாட்டு இழப்பு மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமான விஸ்கான்சின் டெல்ஸ் பகுதிக்கு அருகில் உள்ள மிரர் லேக் ஸ்டேட் பார்க் வனப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வழக்கமான பயணத்திற்காகப் புறப்பட்ட அந்தச் சிறிய ரக விமானம் திடீரெனப் பெருத்த பனிமூட்டம் மற்றும் குளிரான சூழலில் சிக்கிக்கொண்டது.
இதன் காரணமாக விமானத்தின் இறக்கைகளில் கடுமையான அளவில் பனி உறைந்து சேரத் தொடங்கியுள்ளது. பனி உறைவு காரணமாக விமானத்தை இயக்கிச் செல்வதில் கடுமையான சிரமம் ஏற்பட்டதை உணர்ந்த விமானி, உடனடியாக அருகில் உள்ள விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியுள்ளார். விமானி அளித்த தகவலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்ட கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானத்தை உடனடியாகத் தரையிறக்க அனுமதி அளித்துள்ளனர்.
கட்டுப்பாட்டு அறையின் வழிகாட்டுதலின்படி விமானத்தைத் தரையிறக்குவதற்கான தீவிர முயற்சியில் விமானி ஈடுபட்டுள்ளார். ஆனால், பனி உறைவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் விமானத்தின் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக இழந்துள்ளார். விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது எதிர்பாராதவிதமாக மிரர் லேக் ஸ்டேட் பார்க் அருகில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தலைக்குப்புற விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அமெரிக்க மீட்புப் படையினரும் காவல்துறையினரும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், விமானம் முழுமையாக எரிந்து சேதமடைந்திருந்த நிலையில், அதில் பயணம் செய்த ஒரு பச்சிளம் குழந்தை உட்பட ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. விமானியின் துயரமான இறுதித் தொடர்பும், ஒரே விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவமும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
