சோகம்.. பிரபல பாம்பு பிடி வீரர் பிரவோஷ் மரணம்... தான் பிடித்த ‘கட்டுவிரியன்’ பாம்பை குழந்தைகளிடம் காட்டிய போது நேர்ந்த விபரீதம்!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விஷமிக்க கட்டுவிரியன் பாம்பு கடித்ததில், பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பாம்புகளைப் பிடித்து வந்த அனுபவம் வாய்ந்த பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் பியாவ்ரா நகரில் உள்ள சுதாலியா ரோடு பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு விஷமிக்க கட்டுவிரியன் பாம்பு புகுந்துள்ளது. இதுகுறித்துத் தகவல் அறிந்த 40 வயதான பாம்பு பிடி வீரர் பிரவேஷ் (எ) பீனு, அங்கு விரைந்து சென்று அந்தப் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்துள்ளார். அதன் பின்னர், தான் பிடித்த பாம்பை வீட்டிற்கு எடுத்துச் சென்ற பிரவேஷ், அதனை ஆர்வத்துடன் தனது குழந்தைகளுக்குக் காட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பாம்பு அவரைக் கடித்தது.

பாம்பு கடித்த ஆரம்பத்தில் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத பிரவேஷ், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு அவருக்குக் கடுமையான நெஞ்சுப் படபடப்பும் உடல் அசௌகரியமும் ஏற்பட்டுள்ளது.
உடனடியாகக் குடும்பத்தினர் அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகப் போபால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், போபால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவரது உயிர் பிரிந்தது.
உயிரிழந்த பிரவேஷிற்கு கடந்த 10 ஆண்டுகளாகப் பாம்புகளைப் பிடிக்கும் அனுபவம் உள்ளதுடன், இதுவரை பல ஆபத்தான பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்துப் பேசிய பியாவ்ரா நகரக் காவல் ஆய்வாளர் சிவராஜ் சிங் சவுகான், பிரவேஷின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக் குடும்பத்தினர் மறுத்து விட்டதால், உரிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
